இமையம் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது - கதிரவன் அண்ணாமலை

                 

இமையம் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது - கதிரவன் அண்ணாமலை


சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் இமையத்தின் நான்கு சிறுகதைகள் ப்ரஸன்னா ராமஸ்வாமியின் இயக்கத்தில் நாடகங்களாக கடந்த சனிக்கிழமை ஆழ்வார்பேட்டையில் உள்ள ‘மேடை’ அரங்கில் நிகழ்த்தப்பட்டன. சென்னை ஆர்ட் தியேட்டர் வழங்கிய இந்நிகழ்வு ‘இமையம் கதைகளோடு ஒரு மாலைப் பொழுது’ எனத் தலைப்பிடப்பட்டு, எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் என பலரின் முன்னணியில் நடைபெற்றது. நிக்கிலா கேசவன், ஜானகி சுரேஷ், கீதா கைலாசம், பிரசன்னா ராம்குமார், ஸ்மிர்தி பரமேஷ்வர், நந்தக்குமார் ஆகியோர் நாடகங்களின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

நவீன நாடகப் போக்கில் தனக்கென தனிப் பாணியைப் பின்பற்றிவரும் ப்ரஸன்னா ராமஸ்வாமி தமிழ் இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்களின் கதைகளை ‘கதைகள் பேசுவோம்’ என்கிற தலைப்பில் மேடையேற்றி வருகிறார். தி.ஜானகிராமன், அசோகமித்ரன் ஆகியோரின் கதைகளைத் தொடர்ந்து, தற்போது இமையத்தின் எழுத்துக்களையும் நாடக மேடைக்கு கொண்டு சேர்த்திருக்கிறார். விளிம்பு நிலை மனிதர்களையும், அவர்களின் அன்றாட அவதிகளையும் கதைகளாக்கும் இமையத்தின் எழுத்துக்கள் சமூகத்தின் கொடூர முகங்களை கேள்விக்குட்படுத்துபவை. அதிலும், பெண்களை மையப்படுத்தும் அவரது பெரும்பாலான சிறுகதைகள் ஆண்வயப்பட்ட சமூகத்தையும், அதற்கு வலு சேர்க்கும் அதிகார வர்க்கத்தையும் தோலுறிக்கும் தன்மை கொண்டவை. அப்படியான நான்கு சிறுகதைகளான ‘காதில் விழுந்த கதைகள்’, ‘அணையும் நெருப்பு’, ‘மயானத்தில் பயமில்லை’ மற்றும் ‘தாலி மேல சத்தியம்’ ஆகியவற்றை ப்ரஸன்னா நேர்த்தியான முறையில் மேடையேற்றியுள்ளார்.

                       

 ‘அணையும் நெருப்பு’ மற்றும் ‘மயானத்தில் பயமில்லை’ ஆகிய கதைகளில் இடம்பெறும் பெண்கள் சமூகத்திலிருந்து விடுபட்டவர்களாகவும், அதன் மையநீரோட்டத்திலிருந்து துரத்திவிடப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர். முதல் கதையில் வரும் சந்தோசம் ஒரு விதவை. திருமணமாகி சில ஆண்டுகளிலேயே கணவனை இழந்து, சமூகத்தின் சந்தேகத்தால் துரத்தப்பட்டு, தெரியாதொரு ஊரில் வாழ்கிறாள். அங்கு அவளை பாலியல் இச்சையுடன் அணுகும் இளைஞன் ஒருவனுக்கு அவள் தன் கதையை விவரிப்பதே ‘அணையும் நெருப்பு’ கதை. 

‘மயானத்தில் பயமில்லை’ கதையில் சமூகத்தின் விளிம்பில் வாழ்ந்துகொண்டிருக்கும் இரு பெண்கள் ஒருவருக்கொருவர் தங்களின் கதைகளைப் பரிமாறிக்கொள்கின்றனர். தாய் தந்தையை இழந்த சீதாவிற்கு பிணக்குழி வெட்டுபவர் அடைக்களம் கொடுக்கிறார். காலப்போக்கில் மயானம் அவள் வீடாகிறது. பிணக்குழி அவளுக்கு சோறு போடுகிறது. அங்கு சித்தாள் வேலைப்பார்க்க வரும்  நாகமணிக்கு தன் கதையை சொல்லி, அவள் கதையையும் தெரிந்துகொள்கிறாள். இரு கதைகளில் வரும் பெண்களுக்கும் தேவைப்படுவது பேசுவதற்கென்று ஒரு ஆள். தங்கள் கதைகளை சொல்லி அழுவதற்கு ஒரு மடி. இமையம் சொல்வதுபோல் அவரது கதைகளின் பெண்களுக்கு கற்பு, நெறி என்று ஒன்றும் இல்லை. புனிதம் என்று ஒன்றும் இல்லை. தங்களின் பெண்மையின் புனிதத்தை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை.

                              

‘காதில் விழுந்த கதைகள்’ பெயரற்ற மனிதர்களின் கதைகளை அலைபேசியின் மூலம் இணைக்கிறது. ஊர்க்காரர்களுக்கு பயந்தபடியே தன் காதலனிடம் பேசும் இளம்பெண், மகளிடம் தன் கணவனை திட்டித் தீர்க்கும் வாழைப்பழம் விற்கும் பெண், கருத்தரிப்பிற்காக தன்னை அழைக்கும் பெண்ணிடம் ஆலோசனை கூறும் செவிலியர் என பலதரப்பட்ட மனிதர்களின் கதையை பேசுகிறது இக்கதை. முதல் மூன்று கதைகளிலுமிருந்து வேறுபட்ட ‘தாலி மேல சத்தியம்’ பஞ்சாயத்து தேர்தலில் தோல்வியுற்ற ராஜன் தனக்கு வாக்களிக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று தான் கொடுத்த பணத்தை வசூல் செய்வது பற்றியது. உள்ளாட்சி தேர்தல்களில் சாதியைக் கொண்டு செய்யப்படும் அரசியலை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இக்கதை.                                            

பொதுவாக ஒரு பிரதி நாடகமாக நிகழ்த்தப்படும்போது அது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகிறது. ஒளி அமைப்பு, இசை கோர்ப்பு, நடிகர்களின் வசன உச்சரிப்பு, அவர்களின் உடல் மொழி, பார்வையாளர்களின் ஈடுபாடு, அரங்க அமைப்பு எனப் பல்வேறு அம்சங்கள் பிரதியின் அர்த்த தளங்களை விரிவுப்படுத்தி அதனை பன்முகத்தன்மை கொண்டதாய் மாற்றுகிறது. அப்படியான மாற்றங்களைப் பெற்று இமையத்தின் கதைகள் நாடக வடிவில் புதியதொரு கலைப்படைப்பாக பார்வையாளர்களை சென்றடைந்திருக்கின்றன. இதற்கு முக்கிய காரணிகளாக இயக்குனரின் நேர்த்தியான மேடையாக்கமும், நடிகர்களின் இயல்பான நடிப்பும் செயல்பட்டிருக்கின்றன.  

 

                              

 

 

 

 

Comments